Offline
தென்கொரியாவில் அதிபர் பதவி நீக்கத்தால் மக்கள் கொண்டாட்டம்
Published on 12/17/2024 00:55
News

சியோல்,தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன் சுக்-இயோல் குற்றம்சாட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 3-ந்தேதி அங்கு ராணுவ அவசர நிலையை அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. எனினும் அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு 2-வது முறையாக அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தலைநகர் சியோலில் உற்சாக குரல் எழுப்பி பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் மக்கள் அமைதி காக்கும்படி அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Comments