Offline
ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
Published on 12/20/2024 00:50
News

கிங்ஸ்டன்,மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டில், பிராவிடன்ஸ் தீவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டை தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு, திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி) அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து, பணத்தை கொள்ளையடித்து விட்டு, துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் விக்னேஷ் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று மனு அளித்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments