சென்னை:
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் பெரியார் பகுத்தறிவு மின்னிலக்க (டிஜிட்டல்) நூலகம், ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்து ஆக மாற்றியிருக்கிறோம். இளைய தலைமுறை இளைஞர்களிடமும் அவரைக் கொண்டுபோய் சேர்க்கிறோம்,” என்று கூறினார்.
“தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார்.
“திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரது மனதுக்குள்ளும் இடம்பிடித்திருப்பவர்.
“பெரியார் மறைந்து 51 ஆண்டுகள் ஆனபிறகும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்; இதுதான் அவரின் தனித்தன்மை,” என்றார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவரான தந்தை பெரியார் மறைந்த போதும் இன்றைய அரசியலிலும் அவரது கருத்தியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
திராவிடர் கழகம் சார்பில் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திராவிட கழகத்தினர் பெரியார் திடலுக்கு பேரணியாக வந்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அங்கு பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.