Offline
Menu
மொசாம்பிக் சிறையில் கலவரம்; 33 பேர் உயிரிழப்பு
Published on 12/26/2024 23:32
News

மொசாம்பிக் தலைநகர் மபுடோவில் உள்ள சிறையில் மூண்ட கலவரத்தில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இத்தகவலை நாட்டின் காவல்துறைத் தலைவரான கமாண்டர் பெர்னார்டினோ ரஃபேல் நேற்று உறுதிப்படுத்தினார்.

சர்ச்சைக்குரிய அக்டோபர் மாதத் தேர்தலின் தொடர்பில் மொஸாம்பிக்கில் அமைதியின்மை தொடர்கிறது. நீண்டகால ஆளுங்கட்சியான ஃப்ரெலிமோ தேர்தலில் வெற்றிபெற்றதை நாட்டின் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 23ஆம் தேதி உறுதிசெய்ததைத் தொடர்ந்து மொஸாம்பிக் முழுவதும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தேர்தலில் மோசடி நடைபெற்றதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிறைச்சாலைக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் சிறையில் கலவரத்தைத் தூண்டியதாகக் கமாண்டர் ரஃபேல் சாடினார். ஆனால், கைதிகளுக்கிடையே கலவரம் மூண்டதாகவும் வெளியில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஹெலெனா கிடா, உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

 

கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பூசலில், சிறை வளாகத்திலேயே 33 பேர் மாண்டதாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் கமாண்டர் ரஃபேல் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டோரின் அடையாளம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. சம்பவத்தின்போது கைதிகள் ஏறத்தாழ 1,534 பேர் சிறையிலிருந்து தப்பியோடியதாகவும் அவர்களில் 150 பேர் மீண்டும் பிடிபட்டதாகவும் அவர் கூறினார்.

Comments