கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியை சேர்ந்த நிஷித் (13 வயது) என்ற சிறுவன் கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தான்
இந்நிலையில் புதன்கிழமை மாலை, நிஷித் தனது டியூஷன் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.
இரவு 8 மணி தாண்டியும் நிஷித் வீடு திரும்பாததால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராயான நிஷித்தின் தந்தை ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், சிறுவனின் சைக்கிள் அரகேர் பகுதியில் உள்ள புரோமிலி பூங்கா அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு, நிஷித்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் மிரட்டல் போன் அழைப்பு வந்தது.
இதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை, கக்கலிபுரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிஷித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில், காலணிகள் மற்றும் உடைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இந்நிலையில் சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றசாட்டில் குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா என்ற இருவரை போலீசார் நேற்று இரவு பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து மடக்கினர்.
இருவரும், கைது செய்யும்போது, போலீசாரை கொடிய ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், போலீசார் தற்காப்புக்காக ஆறு முறை சுட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா இருவரும் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஜெயநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.