Offline
2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – 10 பேர் கைது
By Administrator
Published on 08/02/2025 09:00
News

மூவார்,

ஜோகூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரே நேரத்தில் நடைபெற்ற நான்கு தேடுதல்களின் வழி , ஒரு அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தை போலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர் . இந்தச் சோதனையில் சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனைகள் கடந்த ஜூலை 21 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்து, மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 70 வயதுக்கு இடையிலான எட்டு உள்ளூர் ஆண்கள், ஒரு உள்ளூர் பெண் மற்றும் ஒரு வெளிநாட்டு ஆண்கள் ஆவர் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவின் இயக்குநர் Datuk Hussein Omar Khan கூறினார்.

மூவார், பாரிட் பூலாய் பகுதியில் லெக்சஸ் காரில் வந்த ஒரு உள்ளூர் ஆணைத் தடுத்து விசாரித்தபோது, 51.1 கிலோகிராம் மெதாம்பெட்டமின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் தொடர்ச்சியான விசாரணையின்பின் நடத்திய சோதனையில், மேலும் ஒரு ஆண், ஒரு பெண் கைது செய்யப்பட்டனர். பின்னர் தஞ்சோங் லாபு பகுதியில் உள்ள வீடொன்றில், கூட்டத்தின் தலைவராகக் கருதப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் மூவாரில், பாரிட் பாகார் சாலையில் உள்ள இடத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் செராஸ்சில் நடந்த சோதனையில், 10.2 கிலோகிராம் மெதாம்பெட்டமின் மற்றும் 105 எக்ஸ்டஸி மாத்திரைகள் (மொத்த எடை 51.3 கிராம்) பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் 61.3 கிலோகிராம் மெதாம்பெட்டமின் மற்றும் 105 எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை பாதிக்கக்கூடிய அளவாகும்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர், இந்த போதைப்பொருள் கூட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் எனவும், அவர்கள் முழுநேர போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர் என்றும், மாதம் RM3,000 முதல் RM15,000 வரையான சம்பளம் பெற்றனர் என்றும் ஹுசைன் தெரிவித்தார்.

இத்துடன், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான பழைய குற்றச்செயல்கள் உள்ள மூன்று பேரும், போதைப்பொருள் பரிசோதனையில் வழக்குகள் உள்ள ஆறுபேரும் அடையாளம் காணப்பட்டனர்.

போதைப்பொருள் உடமையின் அடிப்படையில், 1988 சட்டத்தின்கீழ், 7 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஐந்து வாகனங்கள், இரண்டு யமஹா மோட்டார்சைக்கிள்கள், ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், ஒன்பது பிராண்டட் கைப்பைகள் மற்றும் பணப்பைகள், RM2,580 பணம் ஆகியவை அடங்கும்.

இந்த வழக்கு, 1952 இல் அமல்படுத்தப்பட்ட ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது

Comments