மஇகா கட்சியை வலுப்படுத்தவும் இந்திய சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்வதற்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தயாராக உள்ளது என்று கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். கட்சியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் வரும் அழுத்தம் காரணமாக அல்ல என்றும் அவர் கூறியதாக சினார் ஹரியன் தெரிவித்தது.
ஒரு தலைவர் கட்சியின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எனவே, மற்ற கட்சிகளுடன் கலந்துரையாடல்களுக்கான கதவைத் திறக்க முடிவு செய்துள்ளேன் என்று அவர் இன்று சுங்கை சிப்புட்டில் உள்ள துன் சாமி வேலு மாநாட்டு மையத்தில் நடந்த 79ஆவது பேராக் மஇகா மாநாட்டை தலைமை தாங்கி நடத்திய பின்னர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
இது கட்சிக்கு நன்மை பயக்கும் என்றால், இந்திய சமூகத்திற்காகவும் தேவையான அனைத்தையும் செய்வேன். ஒத்துழைப்புக்கான முறையான அழைப்புகள் இன்னும் வரவில்லை என்றும், ஆனால் மஇகா அதன் வாழ்வாரத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்குத் திறந்தே உள்ளது என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
கட்சியின் பலவீனமான நிலையை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் மீண்டும் கட்டியெழுப்ப “நியாயமான நடவடிக்கைகளை” எடுக்க வேண்டும் என்றும் கூறினார். நான் மற்றவர்களைக் குறை கூறவில்லை. எல்லோரும் போராடுகிறார்கள். ஆனால் அவர்களும் எங்களைக் குறை கூற முடியாது. நாங்கள் பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கட்சியை வலுப்படுத்த நாங்கள் பகுத்தறிவு முடிவுகளை எடுப்போம் என்று அவர் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து மஇகா வெளியேற வேண்டும் என்ற எம் துல்சியின் பரிந்துரையைக் குறிப்பிடுகையில், பேராக் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியை புண்படுத்தியதாகக் கூறிய கருத்துக்கு விக்னேஸ்வரன் வருத்தம் தெரிவித்தார். அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாத போதிலும், இந்த நாடாளுமன்ற காலத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதில் மஇகா தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து மதிக்கிறது என்று விக்னேஸ்வரன் கூறினார்.
அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கட்சியின் வழிகாட்டுதல் முடிவு செய்யப்படும் என்று துணைத் தலைவர் எம் சரவணன் கூறியதைத் தொடர்ந்து மஇகாவின் எதிர்காலம் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
உத்துசான் மலேசியாவிற்கு அளித்த பேட்டியில், தன்னைப் போன்ற மூத்த அரசியல் பிரமுகர்கள் கட்சித் தலைவர்களாக இருந்தபோதிலும், அரசாங்கத்தில் எந்தப் பதவிகளும் இல்லாமல் மஇகா ஒற்றுமை அரசாங்கத்தில் “தேவையற்ற விருந்தினராக” உணர்ந்ததாக சரவணன் கூறினார்.
இருப்பினும், தேசிய முன்னணியுடன் தொடர்ந்து இருப்பதன் மூலம் மஇகாவுக்கு சிறந்த எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாரிசான் நேஷனல் தலைவரும் அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.