புத்ராஜெயா,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல், நேற்று மாலை குடிநுழைவு சோதனையின் போது சந்தேகத்துக்குரிய முத்திரைகள், கையெழுத்துகள் கொண்ட வீசாக்களுடன் இருந்த இந்தோனேசிய நபர் ஒருவரை மலேசிய எல்லை மற்றும் சோதனை அமலாக்கப் பிரிவு (MCBA) கைது செய்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த 2022 ஜூலை 18ஆம் தேதி ஜோகூர் மாநிலம் பாசிர் குடாங் வழியாக மலேசியாவுக்கு வந்ததாகவும், அதே ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி KLIA வழியாக வெளியேறியதாகவும் பதிவுகள் இருந்தன.
எனினும், 2022 முதல் 2025 வரை அவரது பெயரில் பதிக்கப்பட்ட பல வருகை மற்றும் புறப்பாட்டு முத்திரைகளில் சந்தேகம் ஏற்பட்டதாக MCBA தெரிவித்தது.
“MyIMMs” கணினி அமைப்பில் மேற்கொண்ட சோதனையில், இந்த காலகட்டத்தில் அவரது வருகை அல்லது புறப்பாட்டு தொடர்பான எந்தவும் பதிவும் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர் 2022ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவை விட்டு எங்கும் செல்லவில்லையென்றும், போலி முத்திரைகள் பெற RM 4,000 செலுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இது, பயண வீசாக்களை முறைகேடாக வழங்கிவரும் ‘‘flying’ syndicate,’ வலையமைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என MCBA சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் முயற்சியாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.