பாயா தெருபோங்:
நேற்று நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால், ஜாலான் பாயா தெருபோங் பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி முகமது சயாபிசானி முகமட் ரோஸ்லி கூறுகையில், சம்பவம் குறித்த அவசர அழைப்பு மாலை 3.41 மணிக்கு துறைக்கு வந்ததாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆய்வின்போது, மூன்று வீடுகளுக்கு அருகிலுள்ள சரிவில் சுமார் 21 சதுர மீட்டர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அந்த மூன்று வீடுகளில் இரண்டு வீடுகள் மேல் பகுதியில், ஒன்று கீழ் பகுதியில் அமைந்துள்ளன. சரிவுகளுக்கு இடையிலான தூரம் சுமார் 10 மீட்டர் எனவும் அவர் கூறினார்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், கேன்வாஸ் விரிப்புகளை பொருத்துவது உட்பட ஆரம்பகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்துவருவதாகவும் அவர் விளக்கினார்.
தீயணைப்புப் படையின் நடவடிக்கைகள் மாலை 5.10 மணிக்கு நிறைவடைந்தன. சம்பவம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மேல்நிலை நடவடிக்கைகள் காவல்துறைக்கும் பொதுப்பணித் துறைக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.