கோலாலம்பூர்:
டெஸ்லா நிறுவனம், தனது தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு (Elon Musk), சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, RM4.75 டிரில்லியன் மதிப்புள்ள புதிய வருமான தொகுப்பை, 2025-ஆம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரி செயல்திறன் விருது (2025 CEO Performance Award) திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மஸ்க்கிற்குச் சம்பளம் எதுவும் வழங்கப்படாது.
ஆனால், அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளுக்குள், 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளை, அவர் பெறுவார். அவரது வருவாயை அதிகரிப்பது, மில்லியன் கணக்கான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வது, ரோபோடாக்சிகள் (robotaxis) மற்றும் மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்துவது, மேலும், டெஸ்லாவின் சந்தை மதிப்பை, RM4.75 டிரில்லியனிலிருந்து RM40.45 டிரில்லியனாக உயர்த்துவது போன்ற, இலக்குகளை அடைவதன் அடிப்படையில், இந்தப் பங்குகள் வழங்கப்படும்.
எனவேதான், குறைந்தது 12 மில்லியன் கூடுதல் மின்சார வாகன விற்பனை உட்பட, 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், மஸ்க்கின் வாக்களிக்கும் அதிகாரத்தை, 12% அதிகரிக்கலாம்.
நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள, வருடாந்திர கூட்டத்தில், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு, பங்குதாரர்களை, டெஸ்லா, கேட்டுக் கொண்டுள்ளது. மஸ்க்கின் தலைமைப் பண்பு, டெஸ்லாவை, “வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக” (the most valuable company in history) மாற்ற, மிக முக்கியமானது என்று, நிறுவனம் தெரிவித்துள்ளது.