லாகூர்:
‘PUBG’ இணையவிளையாட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் தன் தாயார், சகோதரர், இரு சகோதரிகள் என நால்வரைச் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 40 இலட்சம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் 2022ஆம் ஆண்டு அரங்கேறியது. தற்போது 17 வயதான ஸைன் அலி, குற்றம் நிகழ்ந்தபோது வெறும் 14 வயதிலேயே இருந்தார். அவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என மொத்தம் நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஸைன், PUBG விளையாட்டின் வெறியரானார். தினமும் பல மணி நேரம் தன் அறையிலேயே விளையாடிய அவர், இலக்கை அடைய முடியாததால் அடிக்கடி விரக்தியடைந்தார். இதற்கிடையில், நேரத்தை வீணடிப்பதாகக் கூறி தாயார் நகித் முபாரக் அவரை அடிக்கடி கண்டித்ததாகக் கூறப்பட்டது.
சம்பவ நாளில், “பல மணி நேரம் விளையாடியும் இலக்கை எட்ட முடியாததால் ஸைன் தன்னுணர்வை இழந்தார். அதே சமயம் தாயாரிடமிருந்தும் திட்டு வாங்கியதால், ஆத்திரத்தில் இந்தக் கொடூரச் செயலை நிகழ்த்தினார்,” என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.