புதுடெல்லி:
கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி-பிரைம் ஏவுகணையை, ரயிலிலிருந்து இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது.
புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய ராணுவத்தினரையும், பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) அறிவியலாளர்களையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தொடரில் அக்னி-பிரைம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 5,000 கிலோமீட்டர் தொலைவுவரை தாக்கும் திறன் கொண்ட இந்தத் தொடரில், 2,000 கிலோமீட்டர் தொலைவில் இலக்கை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அக்னி-பிரைம் ரயில் தளத்திலிருந்து முதல்முறையாக சோதிக்கப்பட்டது.
இந்த சோதனையின் காணொளியை வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ராஜ்நாத் சிங், “இந்த வெற்றிகரமான சோதனை, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
அக்னி-பிரைம் குறுகிய நேரத்தில் எதிர்வினையாற்றக்கூடிய மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாகும். சிறப்பு ரயில் தளத்தின் மூலம் எளிதாக எந்தப் பகுதிக்கும் கொண்டு செல்லும் வசதி இதற்குக் கிடைக்கிறது.
2011 முதல் DRDO உருவாக்கிய உள்நாட்டு அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை ஏவுகணைகள் தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு வருகின்றன.