கோத்தா பாரு:
பாசிர் புத்தேயில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், 11 மியன்மார் நாட்டவர்களை கிளந்தான் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
செலிங் பகுதியில் வெளிநாட்டினரை சோதனை செய்வது தொடர்பான ஓப்ஸ் சாபு என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு முன்னர் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் முகமட் யூசோஃப் கான் முகமட் ஹசன் தெரிவித்தார்.
“கைதுசெய்யப்பட்டவர்கள் 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவுகள் 6(1)(c) மற்றும் 15(1)(c) இன் கீழ் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்கள். மேலும் விசாரணைக்காக அவர்கள் தானா மேரா குடிநுழைவு டிப்போவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் இருப்பதை எதிர்த்து அமலாக்க நடவடிக்கைகளை குடிநுழைவுத் துறை இடைவிடாமல் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
“சட்டவிரோத குடியேறிகள் அல்லது வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் தெரிவிக்க முன்வருமாறு குடிநுழைவுத் துறை கேட்டுக்கொள்கிறது. சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் மூளையாக செயல்படும், வசதி செய்யும் அல்லது உடந்தையாக இருக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அதேநேரம் இது தொடர்பில் நாங்கள் யாருடனும் சமரசம் செய்ய மாட்டோம்.” என்று அவர் கூறினார்.