கோலாலம்பூர்:
மலேசியர்கள் தங்களது RON95 எரிபொருள் சலுகை தகுதியை உடனடியாக சரிபார்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சகம் இன்ஸ்தா கிராமில் வெளியிட்ட தகவலின் படி, இன்று காலை 9 மணி முதல் அதிகாரப்பூர்வ புடி95 (BUDI Madani) தளத்தின் மூலம் தகுதி சரிபார்ப்பு செய்யலாம்.
மக்கள் தங்கள் மைகாட் எண்ணை மட்டும் உள்ளிடுவதன் மூலம் சலுகை பெறும் உரிமை உள்ளதா என்பதை அறிய முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி புடி95 திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் கீழ், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், ஒரு லிட்டர் RON95 பெட்ரோலை 1 ரிங்கிட் 99 சென் என்ற சலுகை விலையில் பெற முடியும்.
இந்நிலையில் STR ரஹ்மா உதவியை பெறுவோர் செப்டம்பர் 28 முதல் பயன்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதியான ஒவ்வொரு மலேசியரும் மாதத்திற்கு அதிகபட்சம் 300 லிட்டர் எரிபொருளை சலுகை விலையில் பெற முடியும்.
இதேவேளை, ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்த பின் இந்த வரம்பிலிருந்து விலக்கு பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.