Offline
Menu
கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – அதிர்ச்சி சம்பவம்
By Administrator
Published on 10/08/2025 09:00
Entertainment

ஐதராபாத்,தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டாக்சி வாலா, லைகர், கிங்டம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நோட்டா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்ட – ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், புட்டபர்த்தியில் இருந்து விஜய் தேவரகொண்டா இன்று அதிகாலை காரில் ஐதராபாத் திரும்பிக்கொண்டிருந்தார்.

ஐதாராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானாவின் ஜொகுலம்பா கட்வால் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டா பயணித்த கார் மீது சாலையில் பின்னால் வந்த கார் வேகமாக மோதியது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் தேவரகொண்டாவின் கார் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். ஆனால், மோதிய கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவின் கார் லேசான சேதமடைந்தது. அதேவேளை, இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டா உள்பட காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

அதேவேளை, இந்த விபத்து தொடர்பாக விஜய் தேவரகொண்டாவின் கார் டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

Comments