உலகின் மிகப்பெரிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 16,000 ஊழியர்களை (மொத்த பணியாளர்களின் 6%) பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் நவ்ரட்டில் முன்னெடுத்து வரும் வருமான உயர்வு மற்றும் செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
“உலகம் வேகமாக மாறி வருகிறது; அதைவிட வேகமாக நெஸ்லே மாற வேண்டியுள்ளது,” என நவ்ரட்டில் தெரிவித்துள்ளார். “இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சில கடினமான, ஆனால் அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
நெஸ்லே, 2027 ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (சுமார் RM17.5 பில்லியன்) செலவுகளை மிச்சப்படுத்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்பு, அந்த நிறுவனம் 12.5 பில்லியன் ஃபிராங்க் சேமிப்பை இலக்காக வைத்திருந்தது.
நிறுவனம் தயாரிக்கும் நெஸ்பிரெஸோ காப்பி மற்றும் கிட்கேட் சாக்லெட் பிரிவுகள் இதன் கீழ் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முடிவு, மூன்றாம் காலாண்டில் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்ததையடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லோரண்ட் ஃபிரெய்க்ஸ், ஒரு ஊழியருடன் ரகசிய உறவில் இருந்தது வெளிப்பட்டதைத் தொடர்ந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, நவ்ரட்டில் புதிய CEO ஆக பொறுப்பேற்றுள்ளார்.