புதுடெல்லி,தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 16 மாநிலங்களில் பல பகுதிகளில், பட்டாசுகள் வெடிக்க தடை இருந்தது.
இந்த தடையை தளர்த்தக்கோரி மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, பட்டாசு தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதி கே.வினோத் சந்திரன் உள்ளடக்கிய அமர்வு முன், இதுதொடர்பான வாதங்கள் கடந்த வாரம் நடைபெற்றன.
இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டதற்கு இணங்க சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.