கோத்தா பாரு:
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை கிளந்தானில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தியதற்காக அல்லது தங்க வைத்ததாக 90 முதலாளிகள் குடிநுழைவு துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்த 483 அமலாக்கங்களில் 3,442 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1,524 பேர் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர், மீதமுள்ளவர்கள் செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டிருந்தனர் என்று, மாநில குடிநுழைவு இயக்குநர் முகமட் யூசோஃப் கான் முகமட் ஹசன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட முதலாளிகள் சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளிகளுக்கு RM10,000 முதல் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்தோடு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை உள்ளடக்கிய குற்றங்களில் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
அதேநேரம் சட்டவிரோத வேலைத்தளத்தில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிக்கும், பிரிவு 55E இன் கீழ் RM5,000–RM30,000 அபராதம் அல்லது 12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
பிரிவு 55B இன் கீழ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு அமர்த்தும் குற்றத்திற்கும் RM10,000–RM50,000 அபராதம் அல்லது ஒவ்வொரு தொழிலாளிக்கும் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.