கோலாலம்பூர்:
குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் (CSAM) தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய Op Pedo Bersepadu நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் ஒருவர், இத்தகைய ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் விற்று ஒன்பது மாதங்களில் RM76,000 சம்பாதித்தது வெளிச்சத்துக்குவந்துள்ளது.
இந்தச் சம்பவம் “இளைஞர்களிடையே ஒழுக்கம் இன்மை மற்றும் டிஜிட்டல் உலகில் லாப நோக்கமுள்ள ஆபத்தான போக்கின் பிரதிபலிப்பு” என மலேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
“அந்த இளைஞர் ஒவ்வொரு வீடியோவையும் பார்ப்பதற்க்காக குறைந்தபட்சம் RM30 வசூலித்தார்,” என அவர் புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 37 இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கை, புக்கிட் அமான் D11 பிரிவு (பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் பிரிவு) மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) இணைந்து நடத்தியது.
அதில் 12 வயது சிறுவன் ஒருவரும் ஆயிரக்கணக்கான CSAM மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
17 வயது இளைஞர், Telegram குழுவை உருவாக்கி, அதில் Tumblr தளத்தில் கண்டறிந்த வீடியோக்களை ஒவ்வொன்றையும் RM50 வரை விற்றதாகவும் தெரியவந்தது. பணம் e-wallet மற்றும் QR அடிப்படையிலான வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டன.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை நெருக்கமாகக் கண்காணித்து, தார்மீக மதிப்புகளையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (POCSO Act) இன் பிரிவுகள் 8 மற்றும் 10 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. அந்தப் பிரிவுகள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், பகிர்தல் அல்லது வைத்திருத்தல் ஆகியவற்றை கடுமையான குற்றமாக வகைப்படுத்துகின்றன.