Offline
Menu
விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: நயினார் நாகேந்திரன்
By Administrator
Published on 10/30/2025 09:30
Entertainment

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கரூருக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அச்சம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சென்றால் விஜய்யின் உயிருக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“ஒருவேளை இந்த அச்சம் காரணமாகத்தான் அவர் கரூருக்குச் செல்லவில்லையோ எனத் தோன்றுகிறது. திமுக அரசு மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது.

“கரூரில் 41 பேர் இறந்துவிட்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்துவிட்டனர். பாலியல் வன்கொடுமை காரணமாக 10, 15 வயதுப் பிள்ளைகள் சாலைகளில் தனியாக நிற்க முடியவில்லை.

“தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கு சரியாக இருக்கிறது? காவல் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுகின்றனர். நல்ல நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன? பெண்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 53 விழுக்காடு அதிகரித்துள்ளன,” என்றார் நயினார் நாகேந்திரன்.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெல் மூட்டைகள் வீணாகி வருவதைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய்.

கரூர் சோகச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், அவர் வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும்.

தனது அறிக்கையில் தமிழக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ள விஜய், இனியாவது இப்பிரச்சினை தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Comments