Offline
Menu
விஷாலின் “மகுடம்” படப்பிடிப்பு நிறுத்தம்
By Administrator
Published on 11/03/2025 14:13
Entertainment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியிருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.

Comments