நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்திற்கு பின்பு நடிகை சமந்தா பிரபல இந்தி இயக்குநரான ராஜ் நிடிமொருவை அவர் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜ் நிடிமொரு இயக்கிய தி பேமிலி மேன் , சிட்டெடல் ஆகிய இணையத் தொடர்களில் சமந்தா நடித்திருந்தார். அப்போது முதல் இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு தொடர்ந்து வந்தது. நாட்கள் செல்ல இந்த நட்பு காதலாக மாறியதாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகம் சந்தித்துக்கொள்ள தொடங்கியதாகவும் கூறப்பட்டது. பண்டிகைகளை சேர்ந்து கொண்டாடுவது , ராஜ் குடும்பத்தினரை சமந்தா சந்திப்பது என இருவரும் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் புகைப்படஙகள் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான ‘சீக்ரெட் அல்கெமிஸ்ட்’ வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அதில் ராஜை கட்டிபிடித்தபடி சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்இருவரும் காதலிப்பதை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த பதிவில் சமந்தா “ நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டுள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்களாக, எனது வாழ்க்கையில் மிகவும் துணிச்சலான சில முடிவுகளை நான் எடுத்து வருகிறேன். ரிஸ்க் எடுப்பது, உள்ளுணர்வை நம்புவது, முன்னேறும் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொள்கிறேன். இன்று, நான் என்னுடைய சிறிய வெற்றிகளைக் கொண்டாடுகிறேன். நான் சந்தித்த சில புத்திசாலித்தனமான, கடினமாக உழைக்கும் மற்றும் மிகவும் உண்மையான நபர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிகுந்த நம்பிக்கையுடன், இது வெறும் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும்” என கூறியுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகள் ஒன்றாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் 2021 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா இரண்டாவதாக சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது சமந்தா காதலித்து வருவதாக கூறப்படும் ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.