ஐதராபாத்,ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தி கேர்ள் பிரண்ட்’. இந்த படத்தில் தீட்சித் ஷெட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்காக ராஷ்மிகா மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். இவரது உழைப்பு வீண்போகாத வகையில் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல், நல்ல வசூலையும் பெற்று வருகிறது,
‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் வெற்றி கொண்டாட்ட விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். பிரபலங்கள், படக்குழுவினர், ஊடகங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவிடம் வந்த விஜய் தேவரகொண்டா, அவரது கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்தார். ராஷ்மிகா கையில் விஜய் தேவரகொண்டா முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.
நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, “நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அது ஒரு வரம்” என்று பேசினார்.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.