சென்னை – தமிழ் திரையுலகின் பிஸியான நடிகராக திகழும் விஜய் சேதுபதி, அண்மையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வாழ்க்கைச் சவால்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
படம் வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தாலும், தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுவதுடன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடத்த ரூ.70 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “எனக்கும் கடன் இருக்கிறது,” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:
“இந்த விளையாட்டில் பலரும் ‘கடனை அடைக்கத்தான் வந்தேன்’ என்று சொல்கிறார்கள். நானும் அதேபோல தான். ஆயிரத்தில் சம்பாதித்தபோது ஆயிரத்துக்கு கடன் இருந்தது; லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கேற்ப கடன் இருந்தது; இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் கடன் பிரச்சினை தொடர்கிறது. அதனுடன் வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான சவால்.”
இது மட்டுமல்லாமல், சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்க்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.
“இந்தப் படத்தில் நடிக்க 10 நாட்கள் மட்டுமே தேவைப்படுமென்று கூறி அழைத்தார்கள். ஆனால் முழு சம்பளமும் இதுவரை தரவில்லை. இன்னும் பாக்கி உள்ளது; அதைத் தந்தால் நன்றாக இருக்கும்,” என்று விஜய் சேதுபதி அப்போது தெரிவித்துள்ளார்.
அவரது இந்த நேர்மையான வெளிப்பாடு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.