விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணிக்குச் சற்று அழுத்தம் ஏற்பட்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டம் இறுதி ஓவர்கள் வரை செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த இக்கட்டான சூழலில் களம் புகுந்த அனுபவ வீரர் கே.எல். ராகுல், மிகவும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவர் 35 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுத்த இளம் வீரர் ஹர்ஷித் ரானா, பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது திறமையை நிரூபித்தார். அவர் எதிர்கொண்ட 15 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் குவித்து, போட்டியை 49-வது ஓவரிலேயே முடிவுக்குக் கொண்டு வந்தார். இவர்களின் அதிரடி மற்றும் நிதானமான 'பினிஷிங்' ஆட்டம் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
ஹர்ஷித் ரானா ஒரு ஆல்-ரவுண்டராக ஜொலிப்பது இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை இந்தியா தேடி வந்த நிலையில், ரானாவின் இந்தப் பங்களிப்பு அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2026 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.