சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் காரணம் காட்டி அங்கு விளையாட முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் பிடித்ததே இந்த முடிவுக்குக் காரணமாகும். வங்கதேசத்திற்குப் பதிலாக, ஐசிசி தரவரிசையில் அடுத்த இடத்தில் இருந்த ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச வாரியம் தனது போட்டிகளைத் துபாய்க்கு மாற்றக் கோரியிருந்தது, ஆனால் ஐசிசி அதனை நிராகரித்துவிட்டது. இது வங்கதேச ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்காட்லாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் திடீர் மாற்றம் உலகக்கோப்பை அட்டவணையில் சிறிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஐசிசி திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்து. பாகிஸ்தான் அணியும் இதே போன்ற முடிவை எடுத்தால் அவர்களும் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.