சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள மெயின் ஏர்போர்ட்டில் இன்று (பிப்ரவரி 11, 2026) பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 50 பயணிகளுடன் சென்ற ஒரு பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையை விட்டு விலகி அருகில் உள்ள கடற்கரையில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட அதிர்வால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவியது. விமானத்தின் ஒரு பகுதி கடற்கரை மணலில் புதைந்தது. எனினும், மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த உடனடித் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமானி மீண்டும் அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகச் சோமாலிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.