மலேசியாவில் அனுமதி இன்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை முன்னிட்டு, பொதுமக்கள் யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ தங்களது சொந்த உணர்வுகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் தன்னிச்சையாகச் செயல்பட எந்த உரிமையும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மலேசியா என்பது தனிநபர்களின் விருப்பப்படி இயங்கும் நாடு அல்ல, இது சட்டத்தின் ஆட்சி (Rule of Law) நிலைநிறுத்தப்பட வேண்டிய நாடு என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், அத்துமீறல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சமீபகாலமாகச் சில தரப்பினர் இத்தகைய வழிபாட்டுத் தலங்களை இடிக்க வேண்டும் என்று முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பிரதமரின் இந்த உரை வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சிலாங்கூர் ரவாங்கில் ஒரு இந்து கோவிலின் ஒரு பகுதியை அத்துமீறி இடிக்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பிரதமரின் இந்த விளக்கம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்தச் சம்பவத்தின் போது ஒரு மண்வாரி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய செயல்கள் நாட்டின் அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மட்டுமே முறையிட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.