Offline
Menu
பர்சியாரன் ரிச்சியில் உள்ள சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை: 40 வெளிநாட்டினர் கைது!
By Administrator
Published on 02/15/2026 17:04
News

கோலாலம்பூர், தேசா பஹ்லாவானில் உள்ள பர்சியாரன் ரிச்சியில் (Persiaran Ritchie) அமைந்துள்ள மூன்று அடுக்கு சொகுசு பங்களா ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 40 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து குடிநுழைவுத் துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் மற்றும் இரண்டு வார கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் சூத்திரதாரியாகச் செயல்பட்டதாக நம்பப்படும் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 சீன ஆண்கள், 19 சீனப் பெண்கள், 5 வியட்நாம் பெண்கள், 2 மியான்மர் பெண்கள் மற்றும் 2 ஜப்பானியப் பெண்கள் அடங்குவர். இவர்களின் வயது 21 முதல் 43-க்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பங்களா ஒழுக்கக்கேடான (Immoral activities) நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருப்பதற்காக உயர் ரக குடியிருப்புப் பகுதியில் இந்த பங்களா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘சேல்ஸ்மேன்’ என அழைக்கப்படும் நபர் மூலம் ஆன்லைன் தளங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சீன வாடிக்கையாளர்களை மட்டுமே இவர்கள் இலக்கு வைத்துள்ளனர். 45 நிமிடங்களுக்கு RM1,000 முதல் 90 நிமிடங்களுக்கு RM3,500 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத கும்பல் கடந்த ஆறு மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் சூத்திரதாரி உட்பட இருவர் மட்டுமே முறையான வேலை அனுமதிப் பத்திரம் (Employment Pass) வைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்களில் பலர் சமூக வருகை அனுமதி (Social Visit Pass) வைத்திருந்தனர், சிலரிடம் முறையான பயண ஆவணங்களே இல்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உதவ ஒரு சிங்கப்பூர் நாட்டு ஆடவர் மற்றும் ஒரு உள்ளூர் நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டங்களை மீறும் எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

Comments