கோலாலம்பூர்,
குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் 52 வயது பெண்ணின் உடலில் 89 காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் மற்றும் தாக்குதலிலிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட தற்காப்பு காயங்கள் (Defensive cuts) எனத் தெரிகிறது.
அதேநேரம் 54 வயதான கணவனது உடலில் 10 காயங்கள் மட்டுமே இருந்தன. அவர் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் நம்புகின்றனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு தவறான புரிதல் (Misunderstanding) காரணமாக இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கைகள் வரும் திங்கட்கிழமை (பிப். 16) அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் எனவும், உயிரிழந்த பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.