தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கருப்பு', 'சூர்யா 46' மற்றும் 'சூர்யா 47' ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. தமிழக தேர்தல் முடிவடைந்த பிறகு இப்படம் வெளியாகும் என இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 'சூர்யா 47' படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ரஜினிகாந்துக்காக அஸ்வத் ஒரு கதையைத் தயார் செய்திருந்தார், ஆனால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. தற்போது அதே கதையை சூர்யாவிடம் கூற, கதை பிடித்துப்போனதால் சூர்யா ஓகே சொல்லிவிட்டதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மைல்கல்லாக அமைந்த 'அயன்' படத்தைப் போல மிகச்சிறந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அஸ்வத் தற்போது சிலம்பரசனின் 'GOD Of Love' படத்தில் பிஸியாக இருப்பதால், அதன் பிறகு சூர்யாவின் பட வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.