Offline
Menu
போலி மருத்துவர்கள் ஜாக்கிரதை! கோலாலம்பூரில் சட்டவிரோத மருந்தகங்கள் அதிகரிப்பு – MMA கடும் எச்சரிக்கை
By Administrator
Published on 02/21/2026 12:00
News

கோலாலம்பூர்,

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அதிகரித்து வரும் சட்டவிரோத மருந்தகங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்யும் போலி மருத்துவர்கள் குறித்து மலேசிய மருத்துவச் சங்கம் (MMA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

முறையான மருத்துவத் தகுதியோ அல்லது மலேசிய மருத்துவ மன்றத்தில் (MMC) பதிவோ இல்லாத வெளிநாட்டவர்கள், மருத்துவர்களாக நடித்துச் சட்டவிரோதச் சிகிச்சைகளை வழங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை இவர்கள் நோயாளிகளுக்கு வழங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தவறான நோய்க்கண்டறிதல், முறையற்ற சிகிச்சை மற்றும் போலியான மருந்துகளால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மலேசியச் சட்டப்படி, மலேசிய மருத்துவ மன்றத்தில் (MMC) பதிவு செய்யப்பட்டு, நடப்பு ஆண்டிற்கான செல்லுபடியாகும் வருடாந்தரச் சான்றிதழை (APC) வைத்துள்ளவர்கள் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இந்த விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டாக்டர் திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பலமுறை சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், இந்தச் சட்டவிரோத மருந்தகங்கள் மீண்டும் மீண்டும் செயல்படுவது கவலையளிப்பதாக அவர் கூறினார். குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய கும்பல்கள் அப்பாவி மக்களைக் குறிவைத்துச் செயல்படுவதால், அந்தப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

சிகிச்சை பெறச் செல்லும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் உரிமம் பெற்ற கிளினிக்குகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments