லங்காவி, தஞ்சோங் ரூ (Tanjung Rhu) கடற்கரையில் நேற்று மாலை நீந்தச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமான சீன நாட்டுச் சுற்றுலாப் பயணியின் உடல் இன்று சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
ஷாங்காயைச் சேர்ந்த 48 வயதான மிங்ஃபெய் லான் (Mingfei Lan) என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறைக்காக லங்காவிக்கு வந்திருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில், அவர் ‘பூலாவ் சாபாங்’ (Pulau Chabang) பகுதியை நோக்கி தனியாக நீந்திச் சென்றுள்ளார்.
மாலை 6 மணியாகியும் அவர் கரை திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன், உடனடியாகத் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. காலை 9.45 மணியளவில், அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், பூலாவ் சாபாங் நீர் பகுதியில் அவரது உடல் முகம் குப்புறக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பொது பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக லங்காவி சுல்தானா மாலிஹா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அஸ்ஹார் நுருடின் உறுதிப்படுத்தினார்.