தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தார். 1990-களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த மீனா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
மீனா தனது கணவர் வித்யாசாகரை 2022ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக இழந்தார். 48 வயதில் அவர் காலமானது திரையுலகை அதிர்ச்சியடையச் செய்தது. அதன் பின்னர் தனது மகளுடன் வாழ்ந்து வரும் மீனா குறித்து, சமீப காலமாக இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், ‘ரோஸ்லின்’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ள மீனா, அந்த தொடரின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்தார். தன்னைப் பற்றிய இத்தகைய செய்திகள் மிகவும் காயப்படுத்தியதாகவும், உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் பரப்பப்படும் வதந்திகள் மன வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், “நான் ஒரு பெண் என்பதற்காகவும், தனியாக வாழ்கிறேன் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைப்பது தவறு. இல்லாத விஷயங்களை உருவாக்கி பேசுவது வருத்தமாக உள்ளது. தற்போது இவ்வாறான செய்திகளை பார்த்தால் சிரிப்பே வருகிறது,” என்று கூறியுள்ளார். இதன் மூலம், தனது இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.