புனித ரமலான் மற்றும் வரவிருக்கும் ஐடில்பித்ரி (நோன்புப் பெருநாள்) பண்டிகையை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை, வரும் மார்ச் 19-ஆம் தேதி முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மார்ச் மாதத்திற்கான சம்பளம் மார்ச் 13 முதல் 16-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்பதால், பண்டிகைச் செலவுகளுக்குத் தட்டுப்பாடு இருக்காது என மந்திரி பெசார் உறுதியளித்தார்.
மேலும் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினருக்கும் இந்தச் சிறப்பு நிதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது, அதில் கிராம சமூக மேலாண்மைக் குழு (MPKK) உறுப்பினர்கள், இந்தியச் சமூகத் தலைவர்கள் மற்றும் இளையோர் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாத அலவன்ஸ் (குறைந்தபட்சம் RM500) வழங்கப்படும்.
அதேநேரம் சிலாங்கூரில் பணியாற்றும் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை, ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் (மாதச் சம்பளம் RM3,000-க்கு கீழ் உள்ளவர்கள்) என சுமார் 50,000 பேருக்கு தலா RM300 வழங்கப்படும்.
சிலாங்கூர் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் (Wajar) பதிவு செய்துள்ள ஊடகப் பணியாளர்களுக்கு RM1,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த ‘கித்தா சிலாங்கூர்’ (Kita Selangor) சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்திற்காக மாநில அரசு மொத்தம் RM66.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
“அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது பண்டிகைக் காலத்தில் அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.