Offline
Menu
உலக அரங்கில் மின்னும் கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்: நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் ரமணன்
By Administrator
Published on 02/28/2026 13:00
News

தாய்மொழிப்பள்ளிக் கல்வி என்பது உலகத் தரத்திலான சாதனைகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் தாய்லாந்து, பேங்காக்கில் நடைபெற்ற ‘உலக இளைஞர் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கப் போட்டி 2026’ (World Youth STEM Invention and Innovation 2026) நிகழ்வில் பங்கேற்று, சர்வதேச அளவில் முத்திரை பதித்த சிலாங்கூர், கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை நேற்று புத்ராஜெயாவிலுள்ள தமது அமைச்சிற்கு நேரடியாக அழைத்து அவர் பாராட்டினார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுக்குப் பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களான ஆர்த்திஷா தீபன், ஆதிஷா மூர்த்தி, கேஷ்வின் இளந்தச்சன், அரவின் குமார் மற்றும் புரார்னி விவேகன் ஆகியோரைச் சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின்போது மாணவர்களின் தனித்திறமைகளையும், அவர்களின் வருங்கால லட்சியங்களையும் கேட்டறிந்த அமைச்சர், அவர்களின் அசாத்திய தன்னம்பிக்கையைப் வெகுவாகப் பாராட்டினார்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்குத் தீவிரமான தயாரிப்பு, கட்டுக்கோப்பான ஒழுக்கம், துணிச்சல் மற்றும் வலுவான சுயமரியாதை அவசியம். இந்தச் சிறுவயதிலேயே அத்தனை தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுள்ள இம்மாணவர்கள், சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளனர் என்று அவர் புகழாரம் சூட்டினார். மேலும், அந்த மாணவர்களுடன் உரையாடியபோது அவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர், விண்வெளி ஆய்வாளர் மற்றும் விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்ற தங்களின் கனவுகளைப் பகிர்ந்து கொண்டதை அமைச்சர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

Comments