Offline
Menu
மேற்கு ஆசியப் போர் பாதிப்பு: இன்று மலேசிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம்
By Administrator
Published on 03/14/2026 14:00
News

அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அது மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் நலனில் ஏற்படுத்தக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புகளை மதிப்பீடு செய்ய இன்று சிறப்புக் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தச் சூழலை ஆய்வு செய்ய நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் முதலீட்டு அமைச்சகங்கள் இணைந்து செயல்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது மலேசியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்பதால், பொதுமக்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி வியாபாரிகள் விலையைத் தேவையின்றி உயர்த்துவதைத் தடுக்கவும் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

பொருளாதாரக் கவலைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் தற்போது மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை என்றாலும், சவுதி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களில் பணியாற்றும் 18 மலேசிய மாலுமிகள் இன்னும் அங்கேயே உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து மலேசிய கடல்சார் மாலுமிகள் சங்கம் (MOS) தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Comments