குவா மூசாங்:
ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று முதல் குவா மூசாங் வழித்தடத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறு விபத்துகள் பதிவாகியுள்ளன.
நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் களைப்பு (Fatigue) காரணமாகவே இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கோலா லிப்பிஸ் (Kuala Lipis), பகாங் – குவா மூசாங் நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய கூட்டரசு சாலைகளில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆப்ஸ் செலாமாட் 26’ (Ops Selamat 26) திட்டத்தின் போது, குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டென்ட் சிக் சூன் ஃபூ (Supt Sik Choon Foo), இத்தகவலை தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பாகப் பயணம் செய்யவும் காவல்துறை பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது:
நெரிசலைத் தவிர்க்க கிழக்குக் கரை விரைவுச்சாலை (LPT), கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை (LRTB) மற்றும் பேராக், சிம்பாங் புலாய் (Simpang Pulai) ஆகிய மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் பயணத்தைத் தொடங்கும் முன் வாகனம் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும். நெரிசலான நேரத்தில் வாகனம் பழுதடைந்தால் போக்குவரத்து மேலும் மோசமடையும் என்றும், சாலையில் மற்ற வாகன ஓட்டிகளிடம் சகிப்புத்தன்மையுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குவா மூசாங் – கோலா லிப்பிஸ் சாலை வழியாகப் பயணித்த மக்களுக்கு 300 நோன்பு திறக்கும் (Iftar) உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.