உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ், 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது டென்னிஸ் உலகைத் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்ற அவர், தனது வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகக் குணமடையாததால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் பாரிஸில் மூன்றாவது முறையாகப் பட்டம் வெல்லும் அவரது கனவு இந்த ஆண்டு கலைந்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அல்காரஸ், தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி நீண்ட கால ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரெஞ்சு ஓபன் மட்டுமின்றி, ரோமில் நடைபெறவுள்ள இத்தாலியன் ஓபன் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார். களிமண் தரை ஆட்டங்களில் (Clay court) ஜாம்பவனாகக் கருதப்படும் அவர் இல்லாதது மற்ற வீரர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
தற்போது நடப்புச் சாம்பியன் விலகியுள்ளதால், உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அல்காரஸின் காயம் குறித்து வருத்தம் தெரிவித்த சின்னர், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். டென்னிஸ் ரசிகர்கள் தற்போது ஜூன் மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடரிலாவது அல்காரஸ் பங்கேற்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.