Offline
Menu
தெனோம் அருகே கோர விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்
By Administrator
Published on 04/27/2026 13:00
News

தெனோம்-எனுபாய் (Jalan Tenom-Enubai) சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும் உறவினரும் படுகாயமடைந்தனர்.

கம்போங் ஸ்ரீ மெராந்தி அருகே நேற்றிரவு 10.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தில் ‘டொயோட்டா ஹைலக்ஸ்’ (Toyota Hilux) ஓட்டிவந்த விக்டர் சுங் யின் டாட் (Victor Chung Yin Tat, 41) என்பவர் உயிரிழந்தார். அதேநேரம் விக்டரின் மனைவி (37) மற்றும் அவரது உறவினர் (28) ஆகியோர் காயமடைந்தனர்.

விசாரணையின்படி, இவர்கள் கம்போங் புன்சிலோனில் இருந்து தெனோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்த சாலை நேராக இருந்தபோதிலும், மழையினால் சாலை ஈரமாகவும், போதிய வெளிச்சம் இல்லாமலும் (இருட்டாக) இருந்துள்ளது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் இடதுபுற ஓரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த விக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மனைவி இடது பக்க விலா எலும்பு முறிவு உள்ளிட்ட தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அவரது உறவினர் தலையில் ஏற்பட்ட காயங்களுக்குத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இருவரும் தற்போது தெனோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விக்டரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கெனிங்காவ் (Keningau) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments