Offline
Menu
சுகாதாரக் குறைபாடு: கிளந்தானில் 5 உணவு விடுதிகளை மூட உத்தரவு
By Administrator
Published on 04/28/2026 13:00
News

கிளந்தான், மாச்சாங் (Machang) பகுதியில் போதிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத ஐந்து உணவு விடுதிகளை 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவுச் சட்டம் பிரிவு 11-ன் கீழ் இந்த மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாகோப் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறும் உரிமையாளர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்ட ‘ஒருங்கிணைந்த தூய்மை நடவடிக்கை 03/2026’-ன் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு நச்சுத்தன்மை, டைபாய்டு மற்றும் காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாச்சாங் நகர், பூலாய் சோண்டோங், லாபோக் உட்பட 6 முக்கிய பகுதிகளில் உள்ள 47 உணவு விடுதிகள் சோதிக்கப்பட்டன. 71 சுகாதார அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உணவு சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக 61 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு RM12,250 ஆகும்.

வழங்கப்பட்ட அபராதங்களில் பெரும்பாலாவை (46 நோட்டீஸ்கள்) உணவு கையாளுபவர்கள் முறையான ஆடைகளை அணியாததற்காக விதிக்கப்பட்டது என்றும், முறையான பயிற்சி பெறாத அல்லது தடுப்பூசி போடாத பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது, உணவு விடுதிகளை போதிய தூய்மையுடன் பராமரிக்கத் தவறுவது போன்றவற்றுக்காக வழங்கப்பட்டது என்று கூறினார்.

“உணவு விடுதி உரிமையாளர்கள் தங்கள் வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவர்களின் கடமையாகும். குறைபாடுகளைச் சரிசெய்ய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டாலும், விதிமீறல்கள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று டாக்டர் முகமட் அஸ்மான் வலியுறுத்தினார்.

Comments