அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லவிருந்த தனது தூதுவர்களின் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக் சி இஸ்லாமாபாத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஈரான் மந்திரி ரஷ்ய அதிபர் புடினைச் சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார், இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எவ்வித தடையுமின்றி வர்த்தகம் நடைபெற அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் போரை நிறுத்துவது தொடர்பாக ஈரான் வழங்கிய திட்டத்தில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப்போடக் கோரியிருந்தது டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் போர்ப் பதற்றம் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.