கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு 278 ஹஜ் பயணிகளுடன் (KT051) புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் (MH8110) விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று ஓமனில் உள்ள மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறைக் கண்டறிந்த விமானி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மஸ்கட் நகருக்குத் திருப்பினார். பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாகத் தரையிறங்கியுள்ளதாக லெம்பாகா தபுங் ஹாஜி (Lembaga Tabung Haji) உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மஸ்கட் விமான நிலையத்தில் தபுங் ஹாஜி மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பயணிகளின் நலனைக் கவனித்து வருகின்றனர். பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சப்படத் தேவையில்லை என்றும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் முதல் முன்னுரிமை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள நிலவரப்படி, மஸ்கட்டில் தங்கியுள்ள பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் நாளை அதிகாலை (மே 6) மீண்டும் ஜெடா நகருக்குத் தங்களது புனிதப் பயணத்தைத் தொடர உள்ளனர். இந்த மாற்று விமானம் மஸ்கட்டில் இருந்து அதிகாலை 3 மணிக்கு (ஓமன் நேரம்) புறப்பட்டு, அன்று காலை 5:10 மணிக்கு சவுதி அரேபியாவின் ஜெடா விமான நிலையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.