சர்வதேச அளவில் ஹான்டாவைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவதைத் தொடர்ந்து, மலேசியாவின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சுகாதாரச் சோதனைகளைத் தீவிரப்படுத்த மலேசிய சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இதுவரை மலேசியாவில் யாருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது கூறுகையில், சர்வதேச கப்பல்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸைக் கண்டறிய தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும், எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் காய்ச்சல் அல்லது சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.