Offline
Menu
ஜோகூர் பாருவில் 10 இடங்களில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 33 வெளிநாட்டினர் கைது!
By Administrator
Published on 05/13/2026 12:00
News

ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 33 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை 11 மணியளவில் உணவகங்கள், வாகனக் கழுவும் நிலையங்கள், முடித்திருத்தகங்கள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட 10 வணிக வளாகங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையில் 20 முதல் 51 வயதிற்குட்பட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மியன்மாரைச் சேர்ந்த 15 ஆண்கள், 5 பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 ஆண்கள், 2 பெண்கள், இந்தியாவைச் சேர்ந்த 4 ஆண்கள், வங்காளதேசத்தை சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 1 ஆண் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் முறையான பணி அனுமதிச் சீட்டு (Permit) இல்லாமலும், விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததாகக் கண்டறியப்பட்டது.

ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் தாருஸ் கூறுகையில், “இந்த வெளிநாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மலேசியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது செத்தியா திரோபிகா (Setia Tropika) குடிவரவுத் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை, பிரம்படி அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Comments