மலேசியாவில் இயங்கி வரும் முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள், நாட்டின் இணையப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மதித்து அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.
இன்று (ஜூன் 1, 2026) முதல் புதிய சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதற்கான கட்டாய வயது சரிபார்ப்பு (Age-Verification) நடைமுறைகள், ‘குழந்தைகள் பாதுகாப்பு விதித்தொகுப்பு’ (CPC) மற்றும் ‘ஆபத்து குறைப்பு விதித்தொகுப்பு’ (RMC) ஆகியவற்றின் கீழ் அமலுக்கு வந்துள்ள நிலையில் அமைச்சர் இந்த இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“நாட்டை விட யாரும் பெரியவர்கள் அல்ல!”இன்று இஸ்தானா நெகாரா (Istana Negara) அரண்மனையில் நடைபெற்ற மாமன்னரின் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஃபஹ்மி கூறியதாவது:”இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 (ONSA)-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய விதித்தொகுப்புகளும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இணைய வழி ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கான மிக முக்கியமான முதல் படியாகும்.
இது வெறும் ஆரம்பம் மட்டுமே.சில சமூக ஊடக நிறுவனங்கள் தங்களை இந்த நாட்டை விடவும் பெரியவர்களாக நினைத்துக் கொள்கின்றன. மலேசியாவில் தொழில் செய்து லாபம் ஈட்ட விரும்பும் நிறுவனங்கள், கண்டிப்பாக எங்களது நாட்டுச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும். சட்டங்களை மதிக்கத் தவறும் தளங்கள் மீது அரசு அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
“வயது சரிபார்ப்புக்குத் தேவையான ஆவணங்கள்இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. புதிய கணக்குகளைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் வயதை நிரூபிக்க மலேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
மலேசியர்கள் MyKad அல்லது MyDigital ID யும், வெளிநாட்டினருக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport) என்பன முக்கியம்.
இன்று முதல் (ஜூன் 1) வயது சரிபார்ப்பு ஆவணங்கள் இல்லாமல் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.பழைய கணக்குகள் (Existing Users)ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்களின் வயதைச் சரிபார்க்கச் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான விதிமுறைகள் Facebook, Instagram, TikTok மற்றும் YouTube போன்ற உரிமம் பெற்ற அனைத்து முக்கிய சமூக ஊடகத் தளங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.