Offline
Menu
செலாயாங் பகுதியில் உரிமமின்றி மலிவு விலையில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டு வர்த்தகர்களால் உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
By Administrator
Published on 06/12/2026 10:00
News

கோலாலம்பூர்:

செலாயாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையான வணிக உரிமங்கள் இன்றி வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவது, உள்ளூர் வணிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் நடத்திய ஆய்வில், இந்த வெளிநாட்டு வர்த்தகர்கள் உள்ளூர் கடைகளை விட மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வதால் பொதுமக்கள் அவர்களை நோக்கியே ஈர்க்கப்படுவதாகவும், இதனால் தங்களின் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் 11 ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்து வரும் ஜாக் என்ற உள்ளூர் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

நகராண்மைக் கழக அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது இந்த வெளிநாட்டினர் தப்பியோடி விடுவதாகவும், இங்கு அமலாக்கச் சோதனைகள் அடிக்கடி நடத்தப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) புது சந்தை பகுதியில் நடத்திய அதிரடிச் சோதனையில் உரிமமின்றி வியாபாரம் செய்த 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, விசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 16 வெளிநாட்டினர் குடிநுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments