Offline
Menu
2024 முதல் பாலியல் துன்புறுத்தல்தொடர்பில் 99 புகார்கள் பதிவு: அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தகவல்!
By Administrator
Published on 06/12/2026 10:00
News

மலேசியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான அமைப்பு (TAGS) தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 99 புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 80 வழக்குகள் 60 நாட்களுக்குள் வெற்றிகரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இன்று இங்கு நடைபெற்ற TAGS அமைப்பின் புதிய அலுவலகம் மற்றும் ‘ஈ-டேக்ஸ்’ (e-TAGS) இணையப்பக்கத் தொடக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2024 மார்ச் 8 முதல் ஜூன் 7, 2026 வரையிலான புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர்: “பதிவான 99 புகார்களில், 80 வழக்குகள் முதல் விசாரணை நாளில் இருந்து 60 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 வழக்குகள் தற்பொழுது மேலாண்மைப் பரிசீலனையில் உள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள் பெண் பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் பாதிக்கப்பட்ட சில வழக்குகளும், பெண்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட 2 வழக்குகளும் இதில் அடங்கும்,” என்றார்.

முன்பு காதலித்த அல்லது பழகிய நபர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை உறவு முறிந்த பிறகு தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அமைந்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்தகைய ஒரு வழக்கில் தீர்ப்பாயம் விதித்த 60,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

“முன்னாள் காதலர்கள் அல்லது தெரிந்தவர்களின் புகைப்படங்களை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு முக்கிய பாடம். தற்போதைய சட்டப்படி, இத்தகைய புகைப்பட ஆதாரங்கள் (Visual evidence) நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்திய டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி:  “பாலியல் துன்புறுத்தல் என்பது வெறும் வார்த்தைகளாலோ அல்லது செய்கைகளாலோ செய்வது மட்டுமல்ல. தவறான பார்வைகள், சைகைகள் மற்றும் உடல் ரீதியான அத்துமீறல்கள் என அனைத்தும் இதில் அடங்கும். நம் சமூகம் பொதுவாக இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆனால், இது மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல,” என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்காமல், தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comments