Offline
Menu
உடைப்போம் என முழங்கிய சனுசி நோர்!
By Administrator
Published on 06/14/2026 10:00
News

கடந்த திரெங்கானு மாநிலத் தேர்தலில் பாஸ் (PAS) கட்சி முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது போல, கெடா மாநிலத்தின் அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 36-0 என்ற கணக்கில் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெறுவது சாத்தியமே என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் அதிரடியாக முழங்கியுள்ளார்.

பாஸ் கட்சியின் தேசிய தேர்தல் இயக்குநருமான அவர், நேற்று இரவு நடைபெற்ற கெடா மாநிலப் பாஸ் தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தத் தீர்க்கமான நம்பிக்கையை வெளியிட்டார்.

தற்பொழுது கெடாவில் தங்களது வசம் 33 இடங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டிய சனுசி, எதிர்க்கட்சிகளின் பலவீனம், உட்கட்சிப் பூசல் மற்றும் மக்களிடையே அவர்களுக்குக் குறைந்து வரும் ஆதரவு ஆகியவற்றைப் பயன்படுத்தி எஞ்சிய தொகுதிகளையும் தங்களால் எளிதாகக் கைப்பற்ற முடியும் என்று விவரித்தார்:

“கெடாவில் தற்போது பாக்காத்தான் ஹரப்பான் (PH) வசம் உள்ள சிடாம் (Sidam) மற்றும் பக்கார் அராங் (Bakar Arang) ஆகிய தொகுதிகளில் பிகேஆர் (PKR) கட்சி கடுமையான அதிகாரப் போட்டியால் பலவீனமடைந்துள்ளதால், அவற்றையும் பிஎன் கூட்டணி எளிதில் மீட்டெடுக்கும். அதேபோல், கோத்தா டாருல் அமான் (Kota Darul Aman) தொகுதியைத் தன் வசம் வைத்துள்ள டிஏபி (DAP) கட்சி, சபாவில் செல்வாக்கை இழந்தது போல கெடாவிலும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும்” என்றார்.

இதே வேளையில், மலேசிய அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்க்கும் ஒரு புதிய பரிந்துரையையும் சனுசி முன்வைத்துள்ளார். தேர்தல் செலவினங்களைக் குறைக்கவும், அரசியல் உத்திகளை வலுப்படுத்தவும் ஏதுவாக, 2028-ஆம் ஆண்டு வரை ஆயுட்காலம் கொண்ட தற்போதைய கெடா மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு, அடுத்தாண்டு (2027) நடைபெறவிருக்கும் 16-ஆவது பொதுத்தேர்தலுடன் (PRU16) இணைத்து ஒரே நேரத்தில் கெடா மாநிலத் தேர்தலையும் நடத்தத் தாம் பரிந்துரைப்பதாகக் கூறினார்.

மேலும், மாநிலத்தில் பாஸ் கட்சியின் ஸ்திரமான ஆட்சியே மக்களுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், பாஸ் தொண்டர்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பிஎன் கூட்டணியின் வெற்றிக்காக முழு வீச்சில் களப்பணியாற்றத் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Comments