Offline
Menu

LATEST NEWS

மையங்களில் தஞ்சம்; பேரா ஆற்றில் அபாயக் கட்டத்தைத் தாண்டியது நீர்மட்டம்!
By Administrator
Published on 06/16/2026 09:00
News

ஈப்போ:

பேராக் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 33 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று இரவு நிலவரப்படி 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள லாருட், மாடாங் மற்றும் செலாமா (Larut, Matang and Selama) மாவட்டத்திற்கு நேற்று இரவு 8:00 மணிக்கும், மஞ்சோங் (Manjung) மாவட்டத்திற்கு நேற்று இரவு 11:30 மணிக்கும் என மொத்தம் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: “லாருட், மாடாங் மற்றும் செலாமா மாவட்டத்தில் உள்ள எஸ்கே பத்து ஹாம்பார் (SK Batu Hampar) நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை 14 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆக அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உள்ள கம்பங் பத்து 25, கம்பங் பெர் ஜெயா, கம்பங் பத்து 23 மற்றும் சுங்கை ரொத்தான் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அதேபோல், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள எஸ்கே புருவாஸ் (SK Beruas) நிவாரண மையத்தில் கம்பங் கிலாங், தாமான் ஆங்கிரிக் பெர்மாய் மற்றும் கம்பங் புலாவ் காபோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.”

மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று காலை 5:30 மணியளவில் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கையில், பேராக்கின் கிரியான், லாருட், மாடாங் மற்றும் செலாமா, பாகான் டத்தோ, மஞ்சோங் மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய மாவட்டங்களுக்கு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹிலிர் பேராக் மற்றும் பாகான் டத்தோ மாவட்டங்களில் பாயும் பேரா ஆற்றின் (Sungai Perak) நீர்மட்டம் முறையே 1.38 மீட்டர் மற்றும் 0.66 மீட்டர் என அதன் ஆபத்தான அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால், ஆற்றங்கரை யோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments